சென்னை, மே 6:மகாபலிபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தங்கும் விடுதியில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட 7 பெண்கள் உள்பட 160 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு போதை பொருட்களுடன் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பொன்னி தலைமையில் நேற்று நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

போலீசார் உள்ளே நுழைந்த போது ‘டிஜே’ மூலம் இசை நிகழ்ச்சி நடந்ததுடன் அங்கு பலரும் நடனமாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் அவர்களில் பலரும் போதை பொருட்கள் உட்கொண்ட நிலையில் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 7 பெண்கள் மற்றும் 153 இளைஞர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்பதும், சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும்ஒரு நபருக்கு ரூபாய் ஆயிரம் நுழைவு கட்டணம் வசூலித்ததும் தெரிய வந்தது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இதுபோன்ற போதை பொருட்களுடன் மது விருந்து நடைபெறப்போவதாகவும், நண்பர்களுக்குள் தகவல் அனுப்பியதும் தெரிய வந்தது.

இந்த மது விருந்தில் கலந்து கொள்ள அனைவரும் 50க்கும் மேற்பட்ட சொகுசு கார்களில் வந்துள்ளனர். போலீசார் அந்த கார்களை சோதனை செய்த போது அவற்றில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீசார் கூறும்போது மதுவிருந்து நடைபெற்ற விடுதியில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்த சோதனை நள்ளிரவில் இருந்து அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. பிடிபட்ட அனைவரையும் பேருந்துகளில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது குறித்தும், கலந்து கொண்டவர்கள் பற்றிய முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

மகாபலிபுரம் அருகே தங்கும் விடுதி ஒன்றில் ரவுடிகள் ஒன்று சேர்ந்து விருந்து நிகழ்ச்சி நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது என்றும் அதன்பேரில் போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில் மதுவிருந்தில் ஈடுபட்டவர்கள் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே தங்கும் விடுதி ஒன்றில் இதே போன்று நடைபெற்ற மது விருந்தில் 100க்கும் மேற்பட்ட கேரள வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தற்போது மகாபலிபுரம் அருகே அனுமதியின்றி மதுவிருந்து நடத்தி அதில் கலந்து கொண்டதாக 7 பெண்கள் உள்பட 160 பேர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. பலரும் இந்த விடுதிகளை லீசுக்கு எடுத்துள்ளனர். பெரும்பாலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு நேரங்களில் இந்த தங்கும் விடுதிகளில் இதுபோன்று மது விருந்துகள் நடந்து வருகிறது. இன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 160 பேர் சிக்கியுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.