சென்னை, மே 6: மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகனை போலீசார் தேடிவருகின்றனர்.

வண்டலூர் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). கொத்தனாரான இவருக்கு சுஷ்மிதா (வயது 24) என்ற மனைவி உள்ளார்.
இவர்கள் இருவரிடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்துவந்ததாக கூறப்படுகிறது. தினந்தோறும் மது குடித்துவிட்டு வரும் சதீஷ், மனைவியுடன் சண்டையிடுவதுடன் அவரை அடித்து துன்புறுத்திவருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்றும் மது குடிவிட்டு சதீஷ் தகராறில் ஈடுபட்டதால் பொறுமை இழந்த சுஷ்மிதா, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு மனைவியை அழைத்துவருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், மாமியார் ஜெய்சித்ரா, தனது மகளை அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், தான் எடுத்துவந்த கத்தியால் மாமியாரின் கழுத்தை அறுத்தும், வயிற்றில் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சதீஷை தேடிவருகின்றனர்.