சென்னை, மே 8:சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டினை, அவ்வழியாக சென்ற ஐடி ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

மதுரையை சேர்ந்தவர் செந்தில் (வயது 32) – தினேஷ் (வயது 29). இருவரும் சென்னை தரமணியில் அறை எடுத்து தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூருவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய தினேஷை, வேளச்சேரி விஜயநகரத்திலிருந்து தனது பைக்கில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார், செந்தில். இருவரும் தரமணியில் உள்ள தங்களது அறைக்கு சென்றிருந்தபோது, வழியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனை எடுத்து, வேளச்சேரி போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவை புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டு என்பதும், மொத்தம் ரூ.89,500 மதிப்புள்ள 179 நோட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

பணத்தை யாரேனும் தவற விட்டு சென்றனரா? அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.