புதுடெல்லி, மே 7: நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை, வாக்கு எண்ணிக்கையின் போது விவிபாட் எனப்படும் கருவியுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட வேண்டுமென்று காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விவிபாட் ஒப்பீட்டு நடவடிக்கையை குறைந்தபட்சம் 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 5 கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது.

இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு வாய்ப்பு உள்ளதாகக் கூறி இந்தக் கோரிக்கையை அக்கட்சிகள் வைத்திருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது .

இதையடுத்து செலுத்தப்படும் வாக்குகள் சரியான வேட்பாளருக்கு செல்கிறதா என்பதை சரிபார்க்கும் விவிபாட் கருவிகளில் 50 சதவீத வாக்குகளை ஒப்பிட்டு சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் உச்ச  நீதிமன்றத்தை அணுகின.

ஐம்பது சதவீத வாக்குகளை ஒப்பிட்டு வாக்குகளை எண்ணும் போது உடனடியாக முடிவுகளை அறிவிக்க முடியாது என்றும், முடிவுகளை அறிவிக்க 4 முதல் 6 நாட்கள் வரை ஆகும் என்றும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.

விவிபாட் கருவிகளுடன் பதிவான வாக்குகளை ஒப்பிடும் முறை ஒரு  சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் திருப்தியடையாத காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என்ற விகிதம் சரியானதாக இருக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குகளையாவது ஒப்பிட உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 21 கட்சிகள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன், விவிபாட் ஒப்பீட்டு எண்ணிக்கையை அதிகரிக்கவும் மறுத்து விட்டனர்.