சென்னை, மே 7: அட்சய திருதியையொட்டி  சென்னையில் இன்று அதிகாலை 6 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இரவில் அதிக நேரம் விற்பனை நடைபெறும் என்பதால் தி.நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை அட்சய திருதியை நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, நகைக் கடைகளில் கடந்த 28-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து வந்தனர்.

தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம்  சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் கடந்த ஒரு வாரமாக முன்பதிவு மும்முரமாக நடைபெற்றது. கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி, ரூ.100 தள்ளுபடி, செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடி, அட்சய திருதியை அன்று விலை உயர்ந்தால் பதிவு செய்த விலைக்கே விற்கப்படும் என்று பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளனர்.

தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவை பொருத்தவரை, கடந்த ஆண்டைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுடன், இன்று அதிகாலை 6 மணி முதலே தி.நகரில் நகைக்கடைகள் திறக்கப்பட்டன. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் நகைக்கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் 5,000 கிலோவுக்கு அதிகமாக தங்கம் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு அதை விட விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.