சென்னை, மே 7: சட்டப்பேரவை தலைவரிடம் விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு  சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, அறந்தாங்கி இரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட மூவர் மீது அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்ததையடுத்து, இந்த மூவரிடமும் விளக்கம் கேட்டு சட்டப்பேரவை தலைவர் தனபால் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அன்று நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நேற்று அந்த வழக்கில் சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி பிரபு பேரவை செயலாளரிடம் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக மனு அளித்திருக்கிறார்.

அந்த மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த தடை தனக்கும் பொருந்தும் என நம்புவதாகவும், ஒருவேளை அந்த தடை தனக்கு பொருந்தாவிட்டால் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் அளித்த தடை பிரபுவுக்கு பொருந்துமா? அல்லது அவர் விளக்கம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.