சென்னை, மே 7:  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் நிலையில் மூன்றாவது அணிக்கு அவசியமில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிஜேபி, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் நோக்கத்துடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து பேசிய அவர், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியிடமும் இதுபற்றி தொலைபேசி மூலம் உரையாடினார்.
இதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திக்க இருப்பதாகவும், வரும் 13-ம் தேதி ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பின் போது திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின்தான் முதன் முதலாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.

காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் மூன்றாவது அணி பற்றி ஸ்டாலின் பேச விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் சந்திரசேகர ராவை சந்திக்க மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு சந்திரசேகர ராவ் தரப்பில் திமுகவை அணுகவில்லை என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் எம்.பி.யும், சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா தெரிவித்துள்ளார்.