சென்னை, மே.7: மெட்ரோ ரெயில் 2வது திட்டத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதால் தி.நகரில் பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, ஆகியவற்றிற்கு அடியில்தான் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் இந்த பூங்காக்கள் முழுமையாக கைப்பற்றப்பட மாட்டாது என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்தின் கீழ் ரெயில் பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு- இறுதியில் தொடங்
குவதாக உள்ளது. இந்த வழித்தடத்தில் குறுக்கிடும் தி.நகர் பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, ஆகியவற்றில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுவதாக இருந்தது, அதனால் இந்த பூங்காக்கள் முற்றிலும் அகற்றப்படும் நிலை இருந்தது, தற்போது மெட்ரோ 2 திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு 2 பூங்காக்களுக்கும் அடியில் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மட்டுமே மேல் மட்டத்தில் அமைக்கப்படும் என்பதால் 2 பூங்காக்களிலும், மிக குறைந்த அளவு இடமே கையகப்படுத்தப்படும் என்று நுழைவு வாயிலுக்கு செல்லும் சாலைகள் அமைக்க சிறிதளவு இடமே தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 முக்கிய பூங்காக்களிலும், சிறிதளவு கையகப்படுத்தப்படும் இடம் பணி நிறைவடைந்ததும் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

2 வது மெட்ரோ திட்டம் 3 வளாகங்களாக மொத்தம் 119 கிலோமீட்டர் தொலைவுக்கு 128 நிலையங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
இந்த வழித்தடத்தில் 2000க்கு மேற்பட்ட மரங்கள் அகற்றப்படும் என தெரிகிறது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 12 மரக்கன்றுகள் நடுவோம் என்றனர்.