சுப்ரீம் கோர்ட்டை சுற்றி 144 தடை உத்தரவு

இந்தியா

புதுடெல்லி, மே 7: தலைமை நீதிபதிக்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் நிராகரிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தப் போவதாக சில அமைப்புகள் அறிவித்திருந்த நிலையில் உச்ச  நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக அவரிடம் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த மாதம் 19-ந்தேதி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகார்கள் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு வெளியிட்டார். தனக்கு எதிராக மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதாக அவர் கூறினார். இதனையடுத்து பெண் ஊழியர் அளித்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட விசாரணைக்குழு நேற்று தனது அறிக்கையை அளித்தது. தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான முகாந்திரம் இல்லை என்று அந்தக் குழு தெரிவித்திருந்தது.

இதனிடையே உச்ச நீதிமன்ற விசாரணைக் குழு தலைமை  நீதிபதிக்கு நற்சான்று அளித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்துவதாக உள்ளதென புகார் கூறிய பெண் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த சில வழக்கறிஞர்கள் அமைப்பும், மகளிர் அமைப்புகளும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போராட்டத்தை தடுக்கும் வகையில், உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.