சென்னை, மே 7: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக நீடிப்பது குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது என்றும் அந்த சமயத்தில் நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்போம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்று உள்ளது. மே 19 ல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக  கூட்டணிக்கு இந்த கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், அளித்துள்ள ஒரு பேட்டியில் வரும் காலத்தில் திமுக கூட்டணியில் விசிக நீடிப்பது குறித்து எதுவும் கூறமுடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:- சட்டமன்ற தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும், வித்தியாசம் உள்ளது. நாங்கள் வளரும் கட்சி. நிலைமைக்கு தக்கவாறு திமுக மற்றும் அதிமுக முக்கிய பிரச்சனைகளில் எடுக்கும் முடிவைப்பொறுத்து கூட்டணியை முடிவு செய்வோம்.

பிஜேபியுடன் சேராமல் இருந்தால் திமுகவை அதிமுகவால் எதிர்கொள்ள முடியும். கூட்டணி விவகாரத்தில் விசிக போன்ற சிறிய கட்சிகளின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பெரிய கட்சியான திமுகவே முடிவுகளை எடுக்கிறது. கடந்த காலத்தில் மூன்றாவது அணி அமைத்த அனுபவம் பெரிய அளவில் பயனளிக்கவில்லை மூன்றாவது அணியால் வாக்குகளை ஒன்று திரட்டமுடிந்தது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பிஜேபியை தோற்கடிப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி முக்கிய கட்சி அல்ல. திமுக ,விசிக கூட்டணியால் மாநில அளவில் தலித் மக்களின் வாக்குகளை பெற முடிந்தது.  பிஜேபி மற்றும் பாமகவுடன், அதிமுக சேர்ந்ததால், அதிமுகவிற்கு வாக்களித்து வந்த தலித் வாக்களர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க நேர்ந்தது என்றார்.

2013-ல் நடந்த மரக்கானம் கலவரத்திற்கு பிறகு ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தலித் வாக்களர்கள் அதிமுகவிற்கு மாறினார்கள்.
2014 மக்களவை தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று விசிக பொது செயலாளர் ரவிக்குமார் கூறினார். அதிமுகவுடனான இணைப்பு பாலத்தை நாங்கள் இன்னும் உடைத்துவிட வில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.