புதுடெல்லி, மே 7: மக்களவை தேர்தலில் பிஜேபி பெரும்பான்மை பெறும் நிலையில் மோடி கிங் ஆக இருக்கிறார். எனவே கிங்மேக்கர்களுக்கு அவசியம் இல்லை என சந்திரசேகரராவுக்கு பிஜேபி பதிலளித்துள்ளது.  மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு பிஜேபி-காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணி அமைத்து மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார்.

அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். வரும் 13-ந் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்தநிலவரம் குறித்து பிஜேபி பொதுச் செயலாளரும்,மேல்மட்ட தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் வலைதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- மே 23-ல் மக்களவை தேர்தல் முடிவு வெளியாகும் போது பிஜேபிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து விடும்.

மோடி தலைமையில் அடுத்த ஆட்சி அமைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபிக்கு அதிக இடம் கிடைக்கும். எனவே ஒருசில மாநிலங்களில் ஏற்படும் சரிவை நாங்கள் எளிதில் சமாளித்து விடுவோம். எனவே பெரும்பான்மை கிடைக்காது என்ற பயத்தில் நாங்கள் இல்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் கூட்டாட்சி முன்னணிக்கு எந்த அவசியமும் இருக்காது.

சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் கிங் மேக்கர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கிறார்கள். நாங்களே ஒரு கிங். அப்படி இருக்கும் போது கிங்மேக்கருக்கு என்ன அவசியம் வந்தது. ஒருவேளை பிஜேபிக்கு 271 இடங்கள் கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைவோம். தேசிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் ஆதரவுடன் மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.