திருத்தணி மே 7:  திருத்தணி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டிப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கியது அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீடுகளை வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர். சட்டத்திற்கு புறம்பாக இங்கு வீடுகள் கட்டுவதஎக தகவல் அறிந்த வருவாய் துறையினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேரிடையாக சென்று எச்சரித்ததோடு தடுத்து நிறுத்தினர்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபோது அதிகாரிகள் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் அவசர அவசரமாக கட்டிடம் எழுப்பி தகரக்கூரைகள் அமைத்தனர்.

இந்த இடம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி முடித்திருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி மூலம் தகவல் அறிந்த வருவாய் துறையினர் இன்று நேரிடையாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் திருத்தணி ஆர்.டி.ஓ.பவணந்தி தலைமையில் தாசில்தார் செங்கலா, மண்டல துணை தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு கட்டியிருந்த 11 வீடுகளை ஜே.சி.பி.இயந்திரத்தின் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். அப்போது சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் பக்கத்திலிருந்த நீர்நிலை புறம்போக்கு நிலத்திலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைக்கும் வகையில் நட்டு வைத்திருந்த மூங்கில் களையும் அதிகாரிகள் அகற்றினர்.