ஆண்டிகுவா, மே 7: வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணியை வழிநடத்தி செல்வதை கௌரவமாக கருதுகிறேன் என்று அந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ் கெயில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வெ.இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், ஐபிஎல் தொடரில் மிரட்டும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஆகிய மூத்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ்கெயிலை துணை கேப்டனாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எனக்கு எப்போதுமே பெருமையளிக்கக்கூடிய விஷயம்.

அதிலும், உலகக்கோப்பை தொடர் என்னும் மிகப்பெரிய ஸ்பெஷலான தொடரில் வெ.இண்டீஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இந்த தொடரில், எங்கள் அணி வெற்றி பெற பாடுபடுவோம், என்றார். 39 வயதான கெயிலுக்கு, எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 5-வது தொடர் என்பது, குறிப்பிடத்தக்கது.