சென்னை, மே 8:சென்னை புறநகர் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், தரமற்ற மற்றும் காலாவதியான 380 தண்ணீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் விநியோகிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்யும் கடை மற்றும் நிறுவனங்களில் அதிகாரி சதாசிவம் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அதன்படி, கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 7 மினி வேன்களில் வந்த 680 தண்ணீர் கேன்களை ஆய்வு செய்ததில், அவைகளில் 180 காலவதியான மற்றும் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டது.

மேலும், 200 கேன்கள் போலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் என்பது தெரியவந்தது. இவ்வாறாக, மொத்தம் 380 குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.