சென்னை, மே 8:தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை திரும்பி எடுத்து செல்ல வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

திமுக கூட்டணியின் வெற்றியை தட்டிப்பறிக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆர்.எஸ்.பாரதி இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தேனியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே புதிதாக 50 வாக்குப்பெட்டி எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லாததால் புதிதாக கொண்டு வரப்பட்ட 50 பெட்டிகளை மாற்றி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

அண்மையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை வாரணாசியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆகவே இந்த சந்தேகம் பொது மக்களுக்கு எழுந்துள்ளது. அதே போன்ற சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.

இந்த வாக்கு பெட்டிகளை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு எந்த வாக்குச்சாவடியிலும் கோரவில்லை. அப்படி இருக்கையில் இவற்றை இங்கு கொண்டு வந்தது ஏன்? எங்கள் வெற்றியை தட்டிப்பறிக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது.

கரூரில் 2 மணி நேரம் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை. மதுரை, ஈரோடு ஆகிய இடங்களிலும் நடைபெற்ற சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன. எனவே தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பெட்டிகளை திரும்ப எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.