சென்னை, மே 8:  13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடந்த போது தவறுகள் நடந்து விட்டதாகவும், இந்த வாக்கு சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தயாராகும் வகையில் தேனி மற்றும் ஈரோட்டிற்கு இன்று வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஏப்.18-ம் வாக்குப்பதிவிற்கு முன்னதாக வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இதில் 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தவறு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மாதிரி வாக்குப்பதிவை முற்றிலும் அழித்துவிட்டு வாக்குப்பதிவிற்கு எந்திரங்களை வைக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் கண்ட்ரோல் யூனிட்டுகளையும், விவிபாட் கருவிகளிலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த 46 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவிற்கு தயாராக இருக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் தான் இன்று தேனிக்கு 77 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 50 விவிபாட் கருவிகளும், ஈரோட்டிற்கு 37 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 54 விவி பாட் கருவிகளும் கொண்டு செல்லப்பட்டன.

பூத் ஏஜெண்ட்டுகள் மற்றும் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனை நடத்தி மறு வாக்குப்பதிவு நடத்துவதா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.