தோல்விக்கு இவையனைத்தும் காரணமாம்: தோனி குமுறல்

விளையாட்டு

சென்னை, மே 8: சொந்த மண்ணில் மேட்சை கோட்டைவிட்டதற்கு இவையனைத்தும்தான் காரணம் என்று அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிடுகிறார், சென்னை அணி கேப்டன் தோனி.
இது குறித்து அவர் கூறுகையில், ஆட்டத்தை எங்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. குறிப்பாக, பந்தை யூகித்து பேட்டிங் செய்ய ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. பொதுவாக, சொந்த மண்ணில் களம் காண்பது என்பது சாதகமான விஷயம்.

ஆனால், இந்த பிட்ச்சில் (ஆடுகளத்தில்) இதுவரை 6-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றும் ஆடுகள தன்மை குறித்து நாங்கள் அறிந்துகொள்ள தவறிவிட்டோம் என்றே நினைக்கிறேன். பிட்ச்சில் பந்து எவ்வாறு ஸ்விங் ஆகும் என்பது உள்ளிட்டவைகளை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தால் சிறப்பான பேட்டிங் தந்திருக்கலாம். பவுலிங்கில் கவனம் செலுத்தாதது, சில கேட்ச்களை தவறவிட்டது ஆகியவை எல்லாம் வெற்றி கைமாறி போக சாதகமானது.

திறமையான பேட்ஸ்மேன்கள் எங்கள் அணியில் இருந்தாலும், அவர்கள் சில போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். சில போட்டிகளில் சோபிக்க தவறுகிறார்கள். இப்படி அல்லாமல், அனுபவத்துக்கு ஏற்றாற்போன்று ஆட வேண்டும். எது எப்படியோ, போட்டியில் யாராவது ஒருவர் தோற்றுதானே ஆகவேண்டும். அதிர்ஷ்டவசமாக, பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ளதால், எங்கள் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது.

ஆனால், தற்போது பைனலுக்கு நேரடியாக செல்ல முடியாமல், சுற்றுப்பாதையில் செல்ல வேண்டியதாகிவிட்டது. இருப்பினும், எங்களுக்கு கிடைத்துள்ள 2-வது வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார், நம்பிக்கையுடன்.