சென்னை, மே 8: கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் பேரின் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஏப்ரல் 18 ம் தேதி நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், இக்கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, தமிழ் மீனவர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களை ஒக்கி புயல் தாக்கியபோது மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக நடந்து கொண்டது. இதனால், இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து, அதிக எண்ணிக்கையில் பெயர்களை நீக்கியிருக்க கூடும்.

இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், இப்பகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை, கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு கோடை விடுமுறை கால கோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. 2016 சட்டமன்ற தேர்தலுக்குபின் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து வந்துள்ளது.

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பது பற்றி பொதுமக்கள் சரி பார்த்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  இருப்பினும், இம்மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.