திருச்சி,மே 8: திருச்சியில் பட்டப்பகலில் அ.ம.மு.க.பிரமுகரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர் உசேன், ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் ஜாவித் உசேன் (வயது 24). இவர் அ.ம.மு.க.வில் பொன்மலை பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் ஜாவித் உசேன் அங்குள்ள கோழி இறைச்சிக்கடையில் இறைச்சி வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று ஜாவித் உசேனை தாக்கினர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் கோழி இறைச்சி கடையின் எதிர்புறமுள்ள பால் கடைக்கு ஓடினார். தொடர்ந்து அவர்களும் அவரை விரட்டி சென்று, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரது உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.
இதனையடுத்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்த பொன்மலைபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜாவித் உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ நடந்த இடத்துக்கு போலீஸ் இணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் அரியமங்கலம் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை யாளிகளை கண்டறி வதற்காக சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை போலீசார் எடுத்து சென்றனர்.

இந்த கொலை தொடர்பாக பொன்மலைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜாவித் உசேன் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாவித் உசேனின் நண்பர்கள், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.