சண்டிகர், மே 8: துரியோதனனுடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பிரியங்கா ஹரியானா தேர்தல் பிரச்சாரம் செய்தார். மோடிக்கு துரியோதனை போல் ஆணவம் இருக்கிறது என அவர் கூறினார்.

ஹரியாணா மாநிலம், அம்பாலா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:-  தலைக்கனம், ஆணவம் ஆகியவற்றை நமது நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வரலாறும், மகாபாரதமும் இதற்கு சாட்சி. துரியோதனனும் மிகுந்த ஆணவத்துடன் இருந்தார்.

அவரைத் திருந்தச் செய்ய பகவான் கிருஷ்ணர் முயற்சி செய்தார். ஆனால் கிருஷ்ணரையே துரியோதனன் சிறைப்பிடித்தார்.  பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால், மக்களவைத் தேர்தலை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்கள் விவகாரங்களை முன்வைத்துப் போட்டியிட வேண்டும் என சவால் விடுக்கிறேன்.

மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த பணிகள் குறித்தும், எதிர்காலத்துக்கான தமது திட்டம் குறித்தும் அவர் தெரிவிக்க வேண்டும்.நாட்டின் பிரதமராக மோடி உள்ளார். பிஜேபியின் மிகப்பெரிய தலைவராகவும் இருக்கிறார். ஆனால் அவருக்கு துரியோதனை போல் ஆவணம் இருக்கிறது என்றார் பிரியங்கா.