தூத்துக்குடி, மே 8: கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகின்றது என்றும் தேர்தல் முடிந்த பிறகு திமுக காணாமல் போய் விடும் என்றும் தூத்துக்கு தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் மோகனுக்கு ஆதரவாக புதூ பாண்டியாபுரம், காயல்ஊரணி தருவைகுளம், ஏ,எம்,பட்டி, புதியம்புத்தூரில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர்ராஜூ ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-  எம்ஜிஆர், ஜெயலிதாவால் உருவாக்கப் பட்ட அதிமுக யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்பு கோட்டையாகும். மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார்.

மக்களுக்கு தேவையான திட்டங்கள் மட்டு மல்லாது, அன்றாடம் தேவைப் படும் அனைத்து திட்டங்களையும் பார்த்து பார்த்து நாட்டு மக்களுக்கு செய்தார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்புமிக்க மா நிலமாக தமிழகம் உருவாகியுள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு அராஜக செயல் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக நில அபகரிப்பை திமுகவே செய்தனர். தற்போது ஸ்டாலின் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறி வருகிறார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் ஆலமர விழுதுபோல் படர்ந்துள்ளனர். எப்படி காணாமல் போகும்.

கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகின்றது. திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க தயாராக உள்ளனர். இதனால் தேர்தலுக்கு பிறகு திமுக உடைந்து காணாமல் போய்விடும்.

ஓட்டப் பிடாரம் தொகுதி வாக்காளர்கள் திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் என்றுமே அண்ணா திமுகவின் கோட்டையாக தான் உள்ளது. ஓட்டப் பிடாரம் தொகுதியில் போட்டியிடும் மோகன் ஒரு நல்ல மனிதர்.அனைவ ராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்.

நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுபவர். மோகனுக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.