மதுரை, மே 9:மதுரை டி.பி.கே. பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது சென்னையை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் போலீசார் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

திருமங்கலத்தில் இருந்து சென்னைக்குத் தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது.

மதுரையை நெருங்கிக்கொண்டிருந்தபோது பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தல்லாகுளம் போக்குவரத்து காவலர் ஜோதி மற்றும் அவரது உறவினர் சத்தியவாணி, மற்றும் சூரியகலா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்து மேலும் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மறுபுறம் நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு இருச்சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில் ஆனந்தன் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்கி என்பவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவரும் உயிரிழந்தார்.விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.