விருத்தாசலம், மே 9: வீட்டில் தனியாக இருந்த மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரது மனைவியும் தினக்கூலிக்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

இவர்களது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார்.

வீட்டில் தனியாக இருந்த நிலையில் உறவினர் ஒருவருக்கு போன் செய்து தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்து உதவி கேட்டு கதறியுள்ளார். மாணவியின் குரலைக் கேட்டு வீட்டிற்கு ஓடிவந்த உறவினர் மாணவியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை குத்திய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.