புதுடெல்லி, மே 9:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதாக கூறி அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ராகுல் வின்சி என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? என்று அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.

இதே இரட்டை குடியுரிமை விவகாரத்தை முன்வைத்து பிஜேபி தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட கூடாது என உச்சநீதிமன்றத்தில் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.ஏதோ ஒரு நிறுவனம் ராகுல் பங்குதாரர் என்று கூறியதற்காக அவர் பிரிட்டன் பிரஜை என கூற முடியுமா என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர்.