மதுரை மே 9:  மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்ததற்கு நோயே காரணம் என்றும், மின் தடையால் செயற்கை சுவாசம் தடைபட்டு மரணம் நேரவில்லை என்றும் டீன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் ஒரு மணிநேரத்திற்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது. இந்த நேரத்தில், விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் முற்றிலும் மின்சாரம் தடைபட்டதால் 5பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இது குறித்து டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  மேலூரைச் சேர்ந்த மல்லிகா ஏப்ரல் 18-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், கடந்த 6-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று ரவிச்சந்திரன், பழனியம்மாள் இருவரும் தலையில் உள்ள ரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமாகத்தான் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் உடல்நிலை  செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு முன்பே மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது. இந்நிலையில் மூவரும் இயற்கையாகவே உயிரிழந்தனர். மின்சாரம் தடைப்பட்டதால் அவர்கள் உயிரிழக்கவில்லை. மின்சாரம் தடைப்பட்டாலும் 2 மணி நேரத்திற்கு செயற்கை சுவாசக்கருவி இயங்குவதற்கு பேட்டரி உதவி உள்ளது.

எனவே செயற்கை சுவாசக்கருவி தடைபடுவதற்கு வாய்ப்பே இல்லை. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். மின்சாரம் தடைப்பட்ட நேரம் உயிரிழப்பு நடந்ததே பிரச்னைக்கு காரணம். மருத்துவமனையில் போதிய அளவு ஆக்ஸிஜன் உள்ளது. இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை செயலரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.