ஐதராபாத், மே 9: முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி, ஐதராபாத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை வகிப்போம். மாநில வாரியாக நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து பகுப்பாய்வு செய்து பாருங்கள். பிஜேபி கூட்டணி அரசு வீழ்ந்து விடும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள்.
தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 1996-1998 ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து, மத்தியில் அமைந்திருந்த ஐக்கிய முன்னணி அரசு போன்றதொரு அரசு மீண்டும் அமையக்கூடும் என சில கட்சிகள் கணிக்கின்றனவே?

பதில்:- இப்போது அப்படி எதுவும் கிடையாது. அப்படி இப்போதே சொல்லி விட முடியாது. அதற்கான கால நேரம் வரவில்லை. எங்கள் அனைவரின் பொது எதிரி நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா கூட்டணியும். எனவே மாநில கட்சிகள், பிஜேபி கூட்டணியில் சேராது. எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்று சேர்ந்து நிச்சயம் மத்தியில் கூட்டணி அரசு அமைக்கும்.

கேள்வி:- பிரியங்கா காந்தி, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடாதது குறித்து?

பதில்:- அது தேவையற்றது. ஒரு தொகுதியில் போட்டியிடுகிறபோது, அங்கேயே அவர் முடங்கி விட நேர்ந்திருக்கும். இப்போது அவரது சேவை தாராளமாக கிடைக்கிறது. அவர் பிரசாரத்துக்காக எங்கும் செல்கிறார். அது எங்களுக்கு கூடுதல் நன்மையை கொடுத்திருக்கிறது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.