34 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை

சென்னை

சென்னை, மே 9: பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற போது பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் கண்டிக்கத்தக்கது.

இந்திய மீனவர்கள் 34 பேர் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது எல்லையைத் தாண்டி வந்ததாக பாகிஸ்தான் கடற்படையினர் 34 மீனவர்களை கைது செய்து
சென்று நீதிமன்றக் காவலில் அடைத்திருப்பதும், அவர்களின் 6 படகுகளை பறிமுதல் செய்து  சென்றதும் ஏற்புடையதல்ல.

எனவே மத்திய அரசு – பாகிஸ்தானோடு தொடர்பு கொண்டு நமது மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமல்ல இனிமேல் இந்திய மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டினால் அவர்களை கைது செய்யவோ, படகுகளை பறிமுதல் செய்யவோ கூடாது என்பதையும் மத்திய அரசு – பாகிஸ்தான் அரசிடம் அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.