சென்னை, மே 9: ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜேம்ஸ் குக், சிங்கப்பூரில் அமைத்துள்ள அதன் வளாகத்தில் கல்வி கற்க இந்திய மாணவர்களை அழைக்கிறது. அதற்காக, சென்னை அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் வரும் 10-ம் தேதி இலவச கல்விக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கண்காட்சியில் பங்கேற்பது மட்டுமின்றி, ஆர்வமுள்ள மாணவர்கள் அங்கிருந்தே வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதி மூலம் இந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பல்கலைக் கழக பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம், கடந்த 2003ம் ஆண்டு சிங்கப்பூரில் தனது கிளையைத் தொடங்கியது. தனது கல்வி சேவையைச் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டமிட்ட இலக்கோடு தற்போது வியாபாரம்/வணிகம், தகவல் தொழில்நுட்பம், உளவியல், கல்வி, கணக்கு பதிவியல், கலை, மீன் வளர்ப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற பல துறைகளில் கல்வி கற்க வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்று, அன்றைய தினமே இப்பல்கலைக் கழகத்தில் சேர முடிவு எடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இப்பல்கலைக் கழகத்தின் கல்விக் கட்டணத்தில் 250 சிங்கப்பூர் டாலர் அளவுக்கு சலுகை வழங்கவும் முடிவு செய்து அறிவித்துள்ளது.