திருவள்ளூர், மே 9: தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 200 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி தொழிலாளர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது.இங்கு 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.தொழிற்சாலை நிர்வாகம் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.இதனால் அங்குள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்ய புதிய நிர்வாகம் உத்தரவிட்டது.

இதை கண்டித்து கடந்த 2 ந்தேதி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்,ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் அவர்களுக்கு பணி வழங்க மறுத்து விட்டது.இதனால் ஊழியர்கள் தொழிற்சாலையில் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.இம்மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.