மதுரை, மே 10 :மதுரை அருகே திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் எதிர் எதிரே ஒரே நேரத்தில் வந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் இருந்து தினமும் செங்கோட்டை நோக்கி ரெயில் இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கோட்டையில் இருந்தும் மதுரைக்கு ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்ட ரெயில் தாமதமாக திருமங்கலம் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

இதனால், அந்த ரெயில் அங்கிருந்து உடனடியாக புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. அதே சமயம், செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரெயில் வந்துக் கொண்டிருந்தது.

ஒருவழிப் பாதை என்பதால் செங்கோட்டை செல்ல வேண்டிய ரயில் திருமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டதால், இரு ரெயில்களும் மோதும் நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.