திருச்சி, மே 10: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நூதனமுறையில் கடத்தி வந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 3பயணிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது அதில் வந்த சென்னையை சேர்ந்த முகம்மது நவாஸ்ஷெரீப் என்பவர்மீது சந்தேகம் வலுக்கவே அவரை தனியாக அழைத்துச்சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர் 332 கிராம் 7,90,000 மதிப்புள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல் அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த பைசூல் கரணி என்பவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் 329 கிராம் 7,86,000 மதிப்புள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர
விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரிலிருந்து மலிண்டா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ராமநாதபுரம் திருவாடானையை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொண்டு வந்த காஸ் அடுப்பை தீவிரமாக சோதனையிட்டனர். இதில் தங்க துண்டுகளை காஸ் அடுப்பின் குழாய்களுக்குள் மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மொத்தம் 18.50 லட்சம் மதிப்புள்ள 24 கேரட் 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கைதான மூன்று பயணிகளிடமிருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்ததுடன் தங்கம் கடத்தல் கும்பலுக்கும் இந்த 3 நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.