சென்னை, மே 10: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் இரு அணிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான போட்டியில் இறங்குவார்கள் என தெரிகிறது.

மே 23-ல் தேர்தல் முடிவு வெளியான உடன் மத்தியில் ஆட்சி அமைப்பது யார்-? என்பது தெரிந்து விடும். பிஜேபி தலைமையில் ஆட்சி அமைந்தால் அதிமுக அணியில் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்படும்.

ஜெயவர்தன் (தென்சென்னை), தம்பித்துரை (கரூர்), கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி) வி.வி.ஆர்.ராஜ்சத்யன் (மதுரை), என்.ஆர்.சிவபதி (பெரம்பலூர்), பி.ரவீந்திரகுமார் (தேனி), பி.வேணுகோபால் (திருவள்ளூர்), மனோஜ்பாண்டியன் (திருநெல்வேலி), எம்.எஸ். ஆனந்தன் (திருப்பூர்) மற்றும் எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை) ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க முயற்சி செய்வார்கள்.

இதேபோல் அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர்கள் அன்புமணி ராமதாஸ் (தருமபுரி), ஏ.கே.மூர்த்தி (அரக்கோணம்), தொழிலதிபர் சாம்பால் (மத்திய சென்னை) ஆகியோரும் மத்திய அமைச்சராக முயற்சி செய்வார்கள். இது தவிர தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் (கள்ளக்குறிச்சி), புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரும் மத்திய அமைச்சராகும் கனவில் உள்ளனர்.

பிஜேபி சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தராஜன் (தூத்துக்குடி), பொன்ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), சி.பி.ராதாகிருஷ் ணன் (கோவை), எச்.ராஜா (சிவகங்கை), நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்) ஆகிய 5 பேரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முயற்சிப்பார்கள். அதிமுக அணியில் மொத்தம் 20 பேர் இந்த போட்டியில் இறங்குவார்கள் என தெரிகிறது. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைக்க முடியாமல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் திமுக அணியில் போட்டியிடும் 22 பேர் அமைச்சராக முயற்சிப்பார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), ஆ.ராசா (நீலகிரி), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சை), ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி (வடசென்னை), தமிழிசை தங்கபாண்டியன் (தென்சென்னை), பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), கனிமொழி (தூத்துக்குடி) ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதில் குறியாக இருப்பார்கள்.

இது மட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளர்கள் எம்.கே.விஷ்ணு பிரசாத் (ஆரணி), வசந்தகுமார் (கன்னியாகுமரி), ஜோதிமணி (கரூர்), செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), ஈவிகேஎஸ் இளங்கோவன் (தேனி), ஜெயக்குமார் (திருவள்ளூர்), திருநாவுக்கரசர் (திருச்சி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), வைத்திலிங்கம் (புதுச்சேரி) ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சராக முயற்சிப்பார்கள். மேலும் மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி (ஈரோடு), விசிக தலைவர் திருமாவளவன் (சிதம்பரம்) மற்றும் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் (பெரம்பலூர்) ஆகியோரும் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பார்கள். வெற்றி தோல்வி மற்றும் மத்தியில் அமையும் ஆட்சியை பொறுத்து இவர்களது கனவு நிறைவேறுமா? இல்லையா? என்பது தெரியும்.