சென்னை, மே 10: முன்னாள் எம்.பி.மனைவி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது மகன் பிரவீனை போலீசார் தேடிவரும் நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதுடன், பிரவீன் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கு உதவிய தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் குழந்தைவேலு. இவர் உயிரிழந்து 4 வருடங்கள் ஆன நிலையில், இவரது மனைவி ரத்தினம் (வயது 63), பெசன்ட் நகர் எலியாட்ஸ் பீட்ச் ரோடு 6-வது அவென்யூவில் உள்ள வீட்டில் தனியாக வசித்துவந்தார். இவர்களின் மகன் பிரவீன் (வயது 35). பி.இ. பட்டதாரியான இவர், வெளிநாடு சென்றுவிட்டு அங்கு வேலை கிடைக்காத விரக்தியில் மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்து தாய் ரத்தினத்திடம் சொத்துக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதனை தரமறுத்த தாயை, கடந்த 15-ம் தேதி படுகொலை செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து, சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனை தீவிரமாக தேடிவருகின்றனர்.  இந்த நிலையில், கொலை நடந்தபோது சம்பவ இடத்தில் மற்றொருவரும் இருந்துள்ளார், என்று விசாரணையில் துப்பு கிடைத்ததையடுத்து இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

அதன்படி, கொலையாளி பிரவீனுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பரும், ஆட்டோ டிரைவருமான பாலவாக்கம் ஜீவரத்னம் நகரைச் சேர்ந்த சத்தியஜோதி (வயது 38) மற்றும் அவரது மனைவி ராணி (வயது 35) ஆகிய இருவரை இன்று காலை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கொலைக்கு மட்டுமின்றி, பிரவீன் வெளிநாட்டில் இருந்து  சென்னைக்கு வந்த காலக்கட்டத்தில் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்து தங்கவைத்ததுடன், கொலைக்குபின்னர் பிரவீன் தப்பிச்  செல்ல காரணமாகவும், சாட்சியங்களை அழிக்க உதவியாக இருந்துள்ளார்,  சத்தியஜோதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.