காஞ்சிபுரம், மே 10: காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது நண்பர்கள் வியாசர்பாடியை சேர்ந்த பாஸ்கர் (வயது 21), காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 21). இவர்கள் மூவரும் எம்.எஸ்.இ. பட்டப்படிப்பு படித்துவந்தனர்.

இந்த நிலையில், படுநெல்லியில் இருந்து ஏனாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரி நோக்கி இவர்கள் மூவரும் இன்று பைக்கில் சென்றுள்ளனர்.  ரவிக்குமார் பைக் ஓட்டிச்சென்றுள்ளார். காலை 10 மணியளவில் புதுப்பாக்கம் என்ற இடத்தில் ரெயில்வே கிராஸிங் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த காஞ்சியிலிருந்து காலாஸ்திரி நோக்கி செல்லும் தனியார் பேருந்து பைக் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில், பைக்கில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டதில், ரவிக்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயங் களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரை மீட்டு காஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.  இது குறித்து பாலுச்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.  கல்லூரி செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.