சென்னை, மே 10: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்த தனி அதிகாரி சேகர், தனக்கு உதவியாக இருக்க இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், காமெடி நடிகரை எஸ்.வி. சேகர், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கே. ராஜன், டி. சிவா, ராதாகிருஷ்ணன்,துரைராஜ், சிவ
சக்தி பாண்டியன் ஆகிய 9 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இந்த குழு நியமனத்துக்கு தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே, தனி அதிகாரி சேகர் நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரமில்லை. குழுவில் உள்ள ஏழு பேருக்கு எதிராக சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என கதிரேசன் தரப்பில் வாதிடப்பட்டது.தனி அதிகாரியின் நிர்வாக உதவிக்காகத்தான் தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு சங்க நிர்வாகத்தில் தலையிடாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வைத்தியநாதன், தற்காலிக குழு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று தெரிவித்து, இம்மனு குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசு, தனி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.