சென்னை, மே 11:  சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கியால் தாக்கி ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.  சென்னையை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் தாகிர் (வயது 52). இவர் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறார்.

இவரிடம் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் என்பவர்கள் செம்பரம்பாக்கத்தில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை விற்பனைக்கு முடித்துத் தருமாறு கேட்டிருக்கின்றனர்.
இதற்கு தாகிர் சம்மதித்து நிலத்தை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனிடையே இருவரிடமும் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சமரச பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நெல்லையைச்  சேர்ந்த ஜான்சன், இளங்கோ உட்பட மூன்று பேரை தாகிர் அழைத்து வந்திருக்கிறார்.
துரைப்பாக்கத்தில் ஒரு அறையை எடுத்து அவர்கள் தங்கியிருந்தார்கள். துரைப்பாக்கத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றிருக்கிறது. அப்போது தாகிர் அழைத்து வந்த ஜான்சன் மற்றும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஜான்சன் துப்பாக்கியால் தாகிரை தாக்கி அவரிடமிருந்த ரூ.1 கோடி பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்த நிலம் தொடர்பான மூலப் பத்திரங்களையும் அவர்கள் பறித்துள்ளனர். பின்னர் அவரை அண்ணா சதுக்கத்தில் இறக்கி விட்டுவிட்டு தாகிரின் மனைவிக்கு தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலீசில் புகார் செய்தால் குடும்பத்தை தொலைத்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அண்ண சதுக்கத்தில் இறக்கி விடப்பட்ட தாகிர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஜான்சன் உட்பட மூன்று பேர் தன்னை தாக்கி ரூ.1 கோடி பணம் மற்றும் பத்திரங்களை பறித்துச் சென்றதாகவும், தன்னை துப்பாக்கியாலும், சவுக்குக் கட்டையாலும் தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.