புதுச்சேரி, மே 11: புதுச்சேரி கவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இதனை எதிர்த்து கவர்னரும், உள்துறை அமைச்சகமும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கடுமையாக போராடினர். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

கவர்னர் கிரண்பேடி தொடர்ந்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இனியாவது அவர் தனது செயல் பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் சந்திக்க நேரிடும். அத்து மீறி செயல்பட்ட கவர்னர் கிரண்பேடிக்கு சரியான தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் இதனை அவசர வழக்காக கருத வில்லை. இது ஐகோர்ட்டின் தீர்ப்பை அங்கீகரிப்பதாக உள்ளது .

நீட் தேர்வு முறையில் பிஜேபி அரசு பல குளறுபடிகள் செய்துள்ளது. அவர்களின் ஆட்சி முடிய போகிறது. அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைய போகிறது. நீட்தேர்வு அப்போது நீக்கப்படும். ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் அவர்களை மன்னிக்கவும் என்று கூறிவிட்டனர். இதனால் நான் இந்த விஷயத்தில் கட்சியோடு ஒத்துப் போகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.