மெட்ரோவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம்

சென்னை

சென்னை, மே 11: மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை முதல் முறையாக தாண்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 24.3 லட்சம் பேர் பயணித்து இருக்கிறார்கள். ஏப்ரல் 26 அன்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து இருக்கிறார்கள் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரெயில் 2015 ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை தொடங்கப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை மட்டுமே இதை பயன்படுத்தி வந்தனர். விமான நிலையம், சிஎம்பிடி மற்றும் சென்ட்ரலுடன் இணைக்கப்பட்ட பிறகு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வழித் தடமான வண்ணாரப்பேட்டை முதல் ஏஜி டிஎம்எஸ் வரையிலான 10 கிலோ மீட்டர் சுரங்க வழித்தடம் திறக்கப்பட்ட பிறகு பயணிகள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து பயணிகள் எளிதில் விமான நிலையம் செல்ல முடிந்தது.

இதற்கு முன் பூந்த மல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு ஆலந்தூர் வழியாக சென்ட்ரலுக்கு  சென்றவர்கள் இப்போது நேரடியாக செல்ல முடிகிறது என்பதால் பயண நேரம் 15 நிமிடம் குறைகிறது. அதோடு கட்டணமும் ரூ.70-ல் இருந்து 60ஆக குறைகிறது.ஜனவரி மாதத்தில் 17.36 லட்சம் பேர் பயணம் செய்ததாக கணக்கிடப்பட்டது. இது ஏப்ரலில் 26 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. தற்போது ஆயிரம் விளக்கு மற்றும் எல்ஐசி ரெயில் நிலையங்களுக்கு வருவோர் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.

ஏனெனில் இந்த ரெயில் நிலையங்களுக்கு 4 நுழைவுவாயில் அமைக்கப்படுவதற்கு பதிலாக 2 மட்டுமே அமைக்கப்பட்டு இருக்கிறது. இவை நான்காக உயர்த்தப்படும் பட்சத்தில் இந்த ரெயில் நிலையங்களுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.