திருப்பரங்குன்றத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது

அரசியல் தமிழ்நாடு

திருப்பரங்குன்றம், மே 11: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை 100
சதவீதம் செய்து முடிப்போம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள 295 வாக்கு சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் தாலுகா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 295 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பங்கேற்றனர். நூறு சதவீதம் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வெள்ளிக்கிழமை முதல் வாக்குச்சாவடி சீட்டுகளை வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இன்று 2-வது நாளாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தெரு வாரியாக வீடு வீடாக சென்று இந்த சிலிப்புகளை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

100 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.