சென்னை, மே 11:  காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் அதற்கு தொண்டர்களும், தலைவர்களும் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் தமாகாவினர் காங்கிரசில் சேர வேண்டும் என கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார் என ஜி.கே.வாசன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமாகாசை பிஜேபியுடன் இணைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்கொலைக்கு சமம். எனவே தமாகாவினர் காங்கிரசில் சேர வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பது வருமாறு:- த.மா.கா.வை பொறுத்தவரையில் தமிழகத்தில் உள்ள நகரம் முதல் கிராமம் வரை மிகுந்த மரியாதைக்குரிய கட்சியாக, மிக சிறப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குக்கிராமத்தில் கூட எங்களுடைய கட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் எங்களுடைய இயக்கத்தின் மீது, வளர்ச்சியின் மீது ஏனோ பொறாமை கொண்டவர்கள் இதுபோன்ற அவதூறான செய்திகளை வெளியிலே பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பலவீனமாக இருக்கிறது, அது மேலும் பலம் அடையவேண்டும் என்பதற்காக தொண்டர்கள், தலைவர்கள் அதிகம் தேவை என்பதால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இந்த அழைப்பை விடுகிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. த.மா.கா. பலம் வாய்ந்த கட்சியாக செயல்பட்டு வருகிறது. என்று ஜி.கே.வாசன் கூறினார்