சென்னை, மே 11: கூலித்தொழிலாளியாக இருந்து லாட்டரி கிங் ஆக உயர்ந்து பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபரான மார்டின் வளர்ச்சியில் பல மர்மங்களும், வியப்புகளும் அடங்கி உள்ளன. மியான்மரில் யாகூன் நகரில் கூலித் தொழிலாளியாக தனது இளமை காலத்தை கழித்து வந்த மார்டின். 1988-ல் தமிழ்நாட்டில் சொந்தமாக தொழில் செய்ய தொடங்கினார். கோவையில் மார்டின் லாட்டரி ஏஜென்சீஸ் என்ற பெயரில் பல்வேறு மாநில லாட்டரிகளை விற்பனை செய்யத் தொடங்கினார்.

கர்நாடகம் மற்றும் கேரளாவிலும் கிளைகளை பரப்பினார். 2003-ல் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அவரது பலம் சற்று குறைந்தது. ஆனால் பூட்டான், நேபாளம் போன்ற அரசுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அந்த அரசுகளின் லாட்டரி சீட்டுகளை விற்கத் தொடங்கினார்.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். ரியல் எஸ்டேட், ஊடகம், கல்வி மற்றும் பிற துறைகளிலும் ஆர்வம் காட்டினார்.  2011-ல் சிபிஐ சோதனை நடத்தி அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் 33 வழக்குகளை பதிவு செய்தது. இதிலிருந்து அவரது தில்லுமுல்லுகள் வெளிவரத் தொடங்கின.

2005 முதல் ரூ.4752 கோடி மதிப்புள்ள சிக்கிம் அரசு லாட்டரி சீட்டுகளை அவர் கேரளாவில் விற்பனை செய்து வந்ததாகவும், ஆனால் கேரள அரசுக்கு ரூ.143 கோடி மட்டுமே வரியாக செலுத்தினார் என்பதையும் சிபிஐ கண்டுபிடித்தது. இதையடுத்து கேரளாவில் 2012-ல் இருந்து 2 ஆண்டுகளுக்கு சிக்கிம் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. லாட்டரியில் பரிசு பெற்ற பலர் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு சிக்கிம் லாட்டரி சீட்டை வாங்கியதாக சிபிஐயிடம் ஒப்பு கொண்டனர்.

தற்போது கோவையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதில் மேலும் பல வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கணக்கில் காட்டப்படாத ரூ.595 கோடி பிடிபட்டிருப்பதாகவும் லாட்டரி அரசர் மார்டினின் சொத்து மதிப்பு ரூ.7 ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் தெரிய வந்துள்ளது.

மார்டின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவை ஹோமியோபதி கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த பழனிசாமி மே 3-ந் தேதி காரமடையில் ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார். இவரிடம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய போது சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை வருமான வரித்துறை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. பழனிசாமியின் குடும்பத்தினர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளனர். மகன் ரோஹின்குமார் தனது தந்தையின் மர்மமரணம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.