சென்னை, மே 11: தன்னை அடித்த காரணத்தால், நண்பர்களை ஏவி, காதலனை அவரது பைக்கிலேயே கடத்தி  சென்று தாக்கிவிட்டு தப்பியோடிய அமெரிக்க காதலி உட்பட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.  சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நவீத் அகமது (வயது 21). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு 10.45 மணியளவில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, ராமநாதன் தெருவில் எதிரே பைக்கில் வந்த 3 பேரில் இருவர் மட்டும் இறங்கிவந்து கத்திமுனையில் நவீத்தை வழிமறித்து, அவரது பைக்கில் முன்னும் பின்னுமாக ஏறிக்கொண்டனர்.  அந்த நபரில் ஒருவர் பைக்கை ஓட்டிச்செல்ல, நவீத்தை நடுவில் அமரவைத்து, அவரின் பின்னால் மற்றொரு நபர் ஏறி அமர்ந்துக்கொண்டனர். 3-வது நபர் மற்றொரு பைக்கில் இவர்களை பின்தொடர்ந்தவாறு சென்றுள்ளார்.

முகப்பேர், மாதவரம் ஆகிய இடங்களில் சுற்றிய இந்த கும்பல், இறுதியாக ஜாபர்கான் பேட்டைக்கு சென்று அங்குள்ள ஒரு முட்புதரில் பைக்கை நிறுத்திவிட்டு, நவீத்தை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன் அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த வாட்ச் மற்றும் செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடியுள்ளது.

சரமாரி தாக்குதலில் நிலைக்குலைந்த நவீத், இரவு முழுவதும் மயக்கநிலையில் அங்கேயே இருந்துள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார்.  அங்கிருந்த டீக்கடையில் உள்ள போன் மூலம் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில், நவீத்தின் சகோதரர் வந்து, அவரை காரில் அழைத்துச்சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த நவீத், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்த புகாரின்பேரில் டிபி சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.  இது தொடர்பாக, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் நடத்தி விசாரணையில், அமெரிக்காவில் உள்ள வாசவி (வயது 20) என்பவரும், நவீத்தும் காதலித்துவந்துள்ளது தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்குமுன் சென்னை வந்த வாசவி, சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது, அண்ணாநகரில் நவீத்தும்-வாசவியும் சந்தித்துக்கொண்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, நவீத் ஹெல்மெட் கொண்டு, வாசவியை தாக்கியதாக தெரிகிறது.

இதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே தனது நண்பர்களான வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர், சரவணன், பாஷா ஆகிய மூவரை ஏவி விட்டு, நவீத்தை தாக்கியுள்ளார் வாசவி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வாசவி உட்பட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.