சென்னை, மே 11: ஏடிஎம்-ல் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி கோவை சிறையில் உள்ள கைதி, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்தவர் ராஜா. இவர், செங்குன்றத்தில் தங்கி சேத்துப்பட்டில் உள்ள நிறுவனத்தின்கீழ், தனியார் வங்கிகளின் ஏடிஎம்-களுக்கு பணம் நிரப்பும் வேலை பார்த்துவந்துள்ளார்.

அப்போது, ஏடிஎம் மெஷின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு, அதன்மூலம் அயனாவரத்தில் உள்ள ஏடிஎம்-ல் ரூ.8 லட்சம், ஐசிஎஃப்-ல் ரூ. 9 லட்சம் என மொத்தம் ரூ.9.65 லட்சத்துடன் 2017 டிசம்பரில் மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் ராஜா மற்றும் அவரது நண்பர் ஜான்சன் பிரபுவை போலீசார் தேடிவந்தனர்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் கோவையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கும் இதே பாணியில் ரூ.56 லட்சம் கையாடல் செய்துள்ளார், ராஜா. ஆனால், இந்த முறை ராஜாவை போலீசார் கைது செய்து கோவையில் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சென்னையில் நடந்த ஏடிஎம் பணம் திருட்டு தொடர்பான விசாரணைக்காக, கோவை சிறையிலிருந்து கைதி ராஜாவை, ஐசிஎஃப் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி தலைமையிலான போலீசார் இன்று சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.