ஒரே ரீட்சை குறிவைத்து ஓடிய சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள்: காமெடி களமான ஆடுகளம்

விளையாட்டு

விசாகப்பட்டினம், மே 11: சி.எஸ்.கே. வீரர் அடித்த பந்தை, டெல்லி பீல்டர்கள் போட்டிப்போட்டிக்கொண்டு கோட்டை விட, குழம்பி போன சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒரே பிட்சை நோக்கி ஓட, நேற்றைய போட்டிக்களம் சிறிதுநேரம் காமெடி களமாக காட்சியளித்தது.

டெல்லி பவுலர் வீசிய பந்தை சென்னை பேட்ஸ்மேன் டூபிளேசிஸ் அடித்துவிட்டு, எதிர்முனை நோக்கி ஓடிவர, எதிர்முனையில் இருந்த வாட்சனும் ஓடிவந்தார். வாட்சனும், பிளேசிஸ்-ம் நடு ஆடுகளத்தில் ஒருவரையொருவர் சந்தித்தனர். அதற்குள்,  டெல்லி பீல்டர் பந்தை எடுப்பதை கவனித்த வாட்சன், ரன் அவுட் ஆகிவிட போகிறோம் என்ற பீதியில், தான் நின்ற கிரீஸ்ஸை நோக்கி ஓட அவரை ஓவர் டெக் செய்து டூபிளேசிசும் ஓடினார். ஆக, இருவரும் ஓரே ரீட்சை குறிவைத்து ஓடினர்.

பின்னர், நடப்பதை புரிந்துகொண்ட பிளேசிஸ், வாட்சன் ஆகிய இருவரும் அவரவர் ரீட்சை மீண்டும் அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது ஒருபுறம் இருக்க, டெல்லியின் பீல்டர், ரன் அவுட் செய்வதற்காக ஸ்டம்பை நோக்கி பந்தை எறிய, பந்து பவுண்டரி நோக்கி சென்றது.

பின்னர், பவுண்டரியில் நின்றவர் அதை எடுத்து வீச, ஒரு வழியாக பவுலரின் கையில் பந்து சென்றடைந்தது. இப்படியாக விவரிக்க முடியாத நகைச்சுவை காட்சி நேற்றை போட்டியில் எதர்ச்சையாக அரங்கேற, இதனை ரசிகர்கள் கண்டு சிரித்தனரோ இல்லையோ, களத்தில் இருந்த வீரர்கள் வாய்விட்டு சிரித்தனர்.

குறிப்பாக, ரன் அவுட் வாய்ப்பை இழந்துவிட்டோமே என்ற சோகத்தையும் மீறி, களத்தில் இருந்த டெல்லி அணியினர் சிறிதுநேரம் சிரித்து மகிழ்ந்தனர்.