சென்னை, மே 12: திண்டுக்கல் பெருமாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் பழனியில் இருந்து பேசியதாக தெரியவந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  அதில் பேசிய மர்ம நபர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பெருமாள் கோயில் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

காவல் கட்டுப்பாட்டுஅறையில் இருந்த போலீசார் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றது. கோயிலில் உள்ள சன்னதிகள், பக்தர்கள் செல்லும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற  சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து போனில் பேசிய நபர் எங்கிருந்து பேசினார் என்று கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்ண்டனர்.

அதில் அந்த அழைப்பு பழனியில் இருந்து வந்தாக தெரியவந்துள்ளது. இதையடுத்து போனில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.