சென்னை, மே 12:வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் வாட்டிவதைத்து வருகிறது.

குறிப்பாக நேற்று ஒரேநாளில் 10 இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவானது. அதே போன்று இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அனல்காற்று வீசுவதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: –

தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் வளிமண்டலத்தில் வெப்பச்சலனம் நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.