சென்னை, மே 12:ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வரும் 19-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த 4 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிடையே 5 முனைப் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த 4 தொகுதிகளிலும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனால் 4 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

அதிமுகவை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற நேற்று தனது பிரசாரத்தை துவங்கியுள்ளார். வரும் 17-ந்தேதி வரை தமிழிசை 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார். பிரேமலதா, ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்த 4 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதே போன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் அவரது கட்சி வேட்பாளர்களுக்கு இந்த 4 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார். தற்போது 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.14-ம் தேதி மீண்டும் தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் அன்றைய தினம் ஒட்டபிடாரத்திலும், 15-ம் தேதி திருப்பரங்குன்றத்திலும், 16-ம் தேதி சூலூர் தொகுதியிலும், 17-ம் தேதி அரவக்குறிச்சியிலும் தனது பிரசாரத்தை முடிவு செய்யவுள்ளார்.

4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக 2 கட்ட பிரசாரத்தை நேற்று திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி துவக்கினார்.

அவர் இன்று மாலை 5 மணியளவில் ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரம் செய்கிறார். 13-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 14-ந்தேதி சூலூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவாக ஆதரவு திரட்டுகிறார்.