சென்னை, மே 12: இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தொடர்ந்து சென்று அவரிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகளை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 41). இவரது மனைவி ஜெயப்பிரதா (வயது 37). இவர்களது மகள் ரூபாஸ்ரீ. இன்று காலை இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் எம்ஜிஆர் நகரில் இருந்து புறப்பட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

போரூர் ஏரி அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயப்பிரதா அணிந்திருந்த 13 சவரன் தங்க சங்கிலியை பறித்தனர். இதில் பைக்கில் சென்ற மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.இது குறித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.