கொல்கத்தா, மே 12: மேற்குவங்கத்தில் 2 பிஜேபி தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் பிஜேபி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பிஜேபி தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார். மர்ம மரணம் அடைந்த அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், 2 பிஜேபி தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு மேதினிப்பூர் பகுதியில் பகாபன்பூர் என்ற இடத்தில் சுடப்பட்டு கிடந்த அனந்த குச்சைட் மற்றும் ரஞ்சித் மைத்தி ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.