சென்னை, மே 12:அமெரிக்க பெண்ணை கல்லூரி மாணவர் செல்பி எடுத்த போன் கூவத்தில் வீசப்பட்டதையடுத்து அதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை கீழ்ப்பாக்கத்தைச்
சேர்ந்தவர் நவீத் அகமது (வயது 21). இவர் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து முடித்துள்ளார்.

கடந்த 9-ந் தேதி இரவு 3 பேர் கொண்ட கும்பல் இவரை மோட்டார் சைச்கிளில் கடத்தி சென்றனர். அவரை தாக்கியதுடன் அவரிடம் இருந்த விலையுயர்ந்த செல்போன் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்தனர். மேலும் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை ஜாபர்கான்பேட்டையில் விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் டி.பி. சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அமெரிக்காவில் வசித்து வரும் செங்கல்பட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளுக்கும், நவீத் அகமதுவுக்கும் காதல் இருந்ததாகவும், கடந்த 6.ந் தேதி சென்னை வந்த அவர் சேத் துப்பட்டில் தங்கியதுடன் நவீத் அகமதை அண்ணாநகரில் தனிமை யில் சந்தித்துள்ளார்.

அப்போது நவீத் அகமது அந்த பெண்ணுடன் நெருக்கமாக செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டித்த அந்தப் பெண் அதனை அழித்துவிடும்படி கூறியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அந்த பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் வேளச்சேரியில் உள்ள தனது நண்பர்களான பாஸ்கர் (வயது 26), சரவணன் (வயது 23) ஆகியோரிடம் இது குறித்து கூறி செல்போனை வாங்கி தரும் படி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் நவீத் அகமதுவை கடத்திச்சென்று செல்போனை பறித்தது தெரியவந்தது.

போலீசார் பாஸ்கர்,  சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை யில் நவீத் அகமது பணம் தராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நவீத்திடம் இருந்து பறித்த
செல்போனை அமைந்தகரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியதாகவும் தெரியவந்தது.

அந்த செல்போனில் தான் அமெரிக்க பெண்ணுடன் நவீத் எடுத்த செல்பி படம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் தற்போது கூவத்தில் வீசப்பட்ட அந்த  செல்போனை தீவிரமாக தேடி வருகின்றனர்.